தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாக பரவும் செய்தி தவறானது என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிய போதே இதனைத் தெரிவித்த அவர்,
இப்போதெல்லாம், சிலர் சமூக ஊடகங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி தன்னை கேலி செய்து வருகின்றனர்.
அத்துடன், தேசபந்து தென்னகோனை தனது வீட்டில் மறைத்து வைக்கும் அளவுக்கு தான் முட்டாள் அல்ல என்றும் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு கோரி, தற்போது தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோனால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த ரிட் மனுவை நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
அதுமாத்திரமன்றி, தேசபந்து தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மாத்தறை நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேநேரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
நேற்று முதல் இந்த நான்கு குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிஉத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.